×

கர்னி சேனா தலைவர் கொலையை கண்டித்து ராஜஸ்தானில் ரயில், சாலை மறியல் போராட்டம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொலையைக் கண்டித்து அந்த அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். தப்பிய குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பலுடன் தொடர்புடைய ரோகித் கோதாரா கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, கர்னி சேனா அமைப்பினர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், கோடா, பண்டி, அஜ்மீர், சவாய், மோதபூர், சிதோர்கர், ஜலாவர், பாரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. உதய்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுலவகம் முன்பு கர்னி சேனா அமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காடிபுராவில் சுக்தேவ் சிவ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், டிஜிபி உமேஷ் மிஷ்ரா,”குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையில் தப்பி சென்ற இரண்டு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவன் ஜெய்ப்பூரை சேர்ந்த ரோகித் ரத்தோர், மற்றொருவன் அரியானா மாநிலத்தின் மகேந்திரகர்கை சேர்ந்த நிதின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ₹5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இதனிடையே, ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

The post கர்னி சேனா தலைவர் கொலையை கண்டித்து ராஜஸ்தானில் ரயில், சாலை மறியல் போராட்டம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Karni Sena ,Special Investigation Team ,Jaipur ,Rashtriya ,Rajput ,Sukhdev Singh ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...